அன்றாட சமையலுக்கு அத்தியாவசியமான சின்ன வெங்காயம் தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அரியலூர், பெரம்பலூர், நெல்லை, சேலம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, திருச்சி, கோவை, நாமக்கல், தென்காசி, நெல்லை, கிருஷ்ணகிரி உட்பட மாவட்டங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது.
இந்தியாவில் இருந்து சிங்கபூர், இலங்கை, மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் சின்ன வெங்காயம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலும் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.
இதனால், கோயம்பேடு சந்தைக்கு சின்ன வெங்காயத்தின் வரத்து குறைந்து வருகிறது. கடந்த வாரம் மொத்த விற்பனையில் கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது 130 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சில்லறை விலையில் கிலோ ரூபாய் 150 வரை விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது, இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.