ஆன்லைன் விளையாட்டில் பணம் வென்றவர்களுக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது.
வருமான வரித்துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ”கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ. 58,000 கோடி பரிசு பணம் வென்றுள்ளனர். மேலும், ஆன்லைன் விளையாட்டுகளில் அதிக பணம் ஈட்டியவர்களின் விவரம் வருமான வரித் துறையிடம் உள்ளது. அந்த விவரங்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது. அதனால், அவர்கள் பெற்ற பரிசுப் பணத்திற்கான வரியை கட்ட வேண்டும்” என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. சமீபத்தில் ஜிஎஸ்டி புலனாய்வுத்துறை பெங்களூருவைச் சேர்ந்த ஆன்லைன் விளையாட்டு நிறுவனமான கேம்ஸ்கிராப்ட் டெக்னாலஜி நிறுவனத்திற்கு ரூ.21,000 கோடி வரி மற்றும் வட்டி, அபராதம் செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

மேலும், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தொடர்ந்து ஜிஎஸ்டி செலுத்தாமல் இருந்ததால் வட்டி மற்றும் அபராதத்துடன் பெரிய அளவிலான தொகை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனையடுத்து, தற்போது ஆன்லைன் விளையாட்டுகளில் பணம் வென்றவர்கள் வருமான வரி செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றது. ஆகையால், ஆன்லைன் கேம் மூலம் பணம் வென்றவர்கள் விரைவில் வரியை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது.