ஆன்லைன் ரம்மியால் இனி ஒரு தற்கொலை நடந்தாலும் அதற்கு ஆளுநர்தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், கட்சியின் முன்னோடிகளை சந்தித்து 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடி வருகிறார். அதன்படி நாகையில், தனியார் திருமண அரங்கில் பாமக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘தொழிற்சாலைகளில் 80% வேலையை தமிழர்களுக்கு வழங்க தமிழக அரசு சட்டம் நிறைவேற்ற வேண்டும். இன்று கடைசி நாள் என்பதால் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்திற்கு ஆளுநர், இன்றைக்குள் கையெழுத்திட வேண்டும். தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும், ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல.
அரசியல் செய்யாமல், மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு, ஆளுநரும் தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். மேலும், ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம். இந்திய அரசியலில் ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கும் நடைபயணம், பெரிய எதிரொலியை ஏற்படுத்தி பாஜகவுக்கு பின்னடைவை உண்டாக்கும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.