தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..
ஆன்லைன் சூதாட்டத்தால் பல்வேறு குடும்பங்கள் அழிந்து வருகின்றன. ஆன்லைன் ரம்மியினால் இலட்சக்கணக்கான பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலும் கடந்த அதிமுக ஆட்சியில் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அரசு தடை விதித்தது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த தடையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த சூழலில் தமிழக அரசு ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவை கடந்த ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பியது. அவரச சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அன்றைக்கே ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான மசோதா, கடந்த அக்டோபர் மாதம் 19-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.
ஆனால் கடந்த 8-ம் தேதி ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு ஆன்லைன் ரம்மியை தடை செய்ய சட்டம் இயற்றுவதற்கான அதிகாரம் இல்லை என்று ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று முன் தினம் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்காக நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. திருச்சி திருவெறும்பூரில் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்த ரவிசங்கர் என்பவர் தற்கொலை செய்து கொண்டார்.. துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் அதிக தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.. தமிழகத்தில் ஏற்கனவே 40-க்கும் மேற்பட்டோர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது…