ஆன்லைன் ரம்மி குறித்த விளம்பரப் படங்களில் நடிக்காமல் நடிகர்களாக பார்த்து திருந்த வேண்டும் என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் போதை பொருள் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஆன்லைன் ரம்மி விளம்பரங்களில் நடிக்காமல் சம்பந்தப்பட்ட நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும். ஆன்லைன் ரம்மியை மக்களின் கருத்து கேட்ட பிறகு நிரந்தரமாக ஒழிப்பதற்கு சட்டம் கொண்டு வரப்படும். உயர்நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப தான் மக்களுடைய கருத்து கேட்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளது உயர்நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்து உள்ளதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நிச்சயமாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தமிழக அரசு தடை செய்யும். போதைப் பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து வெளிப்பகுதிகளில் இருந்தோ கொண்டு வருவதை நிச்சயமாக தடுத்து நிறுத்தி போதை இல்லாத தமிழகமாக மாற்றப்படும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.