திருச்சி அருகே ஆன்லைனில் ரம்மி விளையாடிய பொறியியல் மாணவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழகத்தில் தடை செய்வது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உயர்நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்நிலையில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட விளையாட்டுக்களை தடுப்பதற்கான அவசர சட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் திருச்சி அருகே மாணவர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். மணப்பாறை அருகே மலையாண்டிப்பட்டியை சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார்.
ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் இவர் ரம்மிவிளையாடி வந்துள்ளார். செலவுக்கு பணம் இல்லாத நிலையில் வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டில் யாருக்கும் தெரியாமல் மோதிரத்தை விற்று அந்த பணத்தையும் ரம்மியில் விளையாடியுள்ளார். பின்னர் அப்போதும் அவருக்கு தோல்வியே ஏற்பட்டது. இதனால் கவலை அடைந்த அவர் கல்லூரியில் இருந்து வெளியே வந்துள்ளார். தனது செல்போனில் தற்கொலை செய்து கொள்வதாக வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். மணப்பாறை கீரை தோட்டம் என்ற இடத்தில் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் கல்லூரி மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் பொறியியல் படிக்கும் கல்லூரி மாணவன் ஆன்லைன் ரம்மியில் மூழ்கி விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற சம்பவங்களைத் தடுக்க உடனடியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நமக்கு தெரிந்தே இவ்வளவு பேர் ரம்மி விளையாட்டுக்காக உயிரிழக்கின்றனர். இது போன்ற தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.