குஜராத் மாநிலம் குச் பகுதியில் ஹாமிமோர் கடற்கரையில் பாதி புதைக்கப்பட்ட நிலையில், பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையிலும் அந்த பெண் யார் என்பது குறித்தோ, அவரை எதற்காக கொலை செய்தனர் என்பது பற்றியோ சிறு துப்பும் துலங்கவில்லை. மேலும், சடலத்தை புகைப்படம் எடுத்து கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகள், வாகனங்களில் ஓட்டி அனுப்பி, தகவல் தெரிந்தால் உடனே போலீசிடம் கூறும்படி, கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றிற்காக 4 பேர் தங்கள் பகுதிக்கு வந்ததாக ஹாமிமோர் கிராமத்தினர் சிலர் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, நிகழ்ச்சி நடந்த இடத்தில் பதிவான சிக்னலை வைத்து செல்போன் எண்களை ஆராய்ந்தனர். அதில், யோகேஷ் ஜோதியானா (37) என்பவரின் செல்போன் எண் குற்றம் நடந்த இடத்திற்கு அருகில் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, கொலையானவர் பெயர் லட்சுமி என்றும், தான் தான் அவரை கொலை செய்தேன் என ஒப்புக்கொண்டார் யோகேஷ் ஜோதியானா.
அதாவது, லட்சுமிக்கு 2-வதாக ஜிதேந்திர பட் என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுடன் லட்சுமியின் முதல் கணவருக்கு பிறந்த மகளும் வசித்து வந்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு பெயிண்ட் அடிக்கும் பணிக்காக வந்த ஜோதியானாவுடன் லட்சுமிக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் 2-வது கணவருக்கு தெரியவரவே அவருக்கும் லட்சுமிக்கு கடும் சண்டை வெடித்துள்ளது. ஆனாலும், கணவர் இல்லாதபோது, லட்சுமி வீட்டுக்கு ஜோதியானா அடிக்கடி சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.
அப்போது, லட்சுமியின் 17 வயது மகள் ஜோதியானாவுடன் பெயிண்டிங் பணிகளுக்கு செல்ல ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு நெருங்கி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த தாய் லட்சுமி, மகளை கண்டித்துள்ளார். தாய் இருந்தால் தங்கள் உறவுக்கு இடையூறாக இருக்கும் என கருதிய சிறுமி, அவரது கள்ளக்காதலனுடன் சேர்ந்து லட்சுமியை தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
அதன்படி, தாய் லட்சுமியை ஹார்மோர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று, பின்னர் கடற்கரையை சுற்றிப் பார்க்கலாம் என்று அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது, லட்சுமியை ஜோதியானா தலையில் கூர்மையான ஆயுதத்தால் கடுமையாக தாக்கியுள்ளார். பிறகு அவரது உடலை கடற்கரையின் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் லட்சுமியின் கள்ளக்காதலன் ஜோதியானா, 17 வயது மகள் மற்றும் கொலைக்கு உதவி செய்த நரன் ஜோதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.