திறந்தநிலைப் பள்ளி நிறுவனங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு, பதவி உயர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தேசிய திறந்த நிலைபள்ளி நிறுவனம் மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் மீண்டும் தங்கள் கல்வியை தொடர்வதற்காக இந்த பள்ளிகள் ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்டவை. அனைவருக்கும் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தபள்ளிகள் உருவாக்கப்பட்டவை. இந்த பள்ளிகளில் மாணவ மாணவியர் தாங்கள் விரும்பிய நேரத்தில் படித்து, விரும்பிய நேரத்தில் தேர்வு எழுத வகை செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் படித்து முடித்தால் அந்த படிப்பு, சிபிஎஸ்இ பள்ளி பாடத்திட்டத்துக்கு இணையானது என்றும் தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனங்கள் அறிவிப்பு செய்து பள்ளிகளை இயக்கி வருகின்றன.
இந்நிலையில், இந்த வகை பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டு மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் படிப்புக்கு இணையான படிப்பு என்று சான்று வழங்கும்படி கேட்டு தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்துக்கு மனு அளிக்கப்பட்டது. இதைதொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் கடந்த டிசம்பர் 21ம் தேதி அரசாணை ஒன்று வெளியிட்டார். அதில், உயர்கல்வி மன்றத்தின் கூட்டத்தின் முடிவின்படி, திறந்த நிலைப் பள்ளி நிறுவனங்களில் 10 மற்றும் 12ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்களின் கல்வித் தகுதியை , தமிழ்நாடு 10 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் தகுதிக்கு இணையாக கருத முடியாது. அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு, பதவி உயர்வுக்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.