அடுத்தாண்டு ஜனவரி மாதம் 22ஆம் தேதி, அயோத்தி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது, இந்தநிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி ராமர் கோயில் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சுவாமி கோவிந்த் கிரி கூறுகையில், “ஜனவரி 21 முதல் 23க்கு இடையில் மங்களகரமான முகூர்த்தம் தீர்மானிக்கப்படும். இது குறித்து பிரதமர் மோடிக்கு தெரியப்படுத்தப்படும்” என்றார். ராமர் கோயிலின் திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகள் (பூஜை) ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும். பிரதமர் நரேந்திர மோடி உறுதி செய்த பிறகு, கோயில் எப்போது திறக்கப்படும் என்பது இறுதி செய்யப்படும் என ஆங்கில செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனவரி 24ஆம் தேதி, ராமர் கோயில் திறக்கப்படும் என தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ஜனவரி 22ஆம் தேதி திறக்கப்படும் என செய்தி வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள புகழ்பெற்ற கோயில்களின் வரலாற்றைக் காண்பிக்கும் வகையில் அயோத்தியில் அமைக்கப்படும் அருங்காட்சியகம் குறித்த விளக்கக்காட்சி பிரதமர் நரேந்திர மோடியிடம் கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டது. டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரதமருடனான உயர்மட்டக் கூட்டத்தில், அருங்காட்சியகத்தை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் அயோத்தியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள், இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.