3 வயது சிறுவனுக்கு தவறுதலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பரேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நாக்கு அறுவை சிகிச்சைக்காக 3 வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். ஆனால், சிறுவனுக்கு தவறுதலாக ஆணுறுப்பில் அறுவை சிகிச்சை (சுன்னத் வகையான அறுவை சிகிச்சை) செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக சிறுவனின் பெற்றோர்கள் கூறுகையில், ’மருத்துவ ஊழியர்கள் கையெழுத்து வாங்குவதற்கு கொடுக்கப்பட்ட படிவத்தில் அனைத்தும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. மேலும், அதில் கையொப்பமிடச் சொன்னதால் கையொப்பமிட்டோம்’ என தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், தவறுதலாக இந்த அறுவை சிகிச்சை நடைபெற்றதா அல்லது அந்த சிறுவனுக்கு ஏற்கனவே ஆணுறுப்பில் ஏதேனும் பிரச்சனை இருந்ததா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக பரேலி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி பல்வீர் சிங் தெரிவித்துள்ளார்.