பச்சோந்தியை விட ஓபிஎஸ் அதிகமாக கலர் மாறுவார் என்றும், அவர் அதிமுகவுக்கு தேவையில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்…
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது ஓ.பன்னீர்செல்வம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.. ஓபிஎஸ் தரப்பில் மன்னிப்பு கேட்டால் அவரை ஏற்க தயாரா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி “ ஓபிஎஸ் தரப்பு மன்னிப்பு கேட்டால் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.. அதிமுக தொண்டர்களுக்கான கட்சி.. தலைவருக்கான கட்சி இல்லை.. தனக்கு சாதகமாக எது இருக்கிறதோ, சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு ஓபிஎஸ் தன்னை மாற்றிக்கொள்வார். சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரி தீர்மானம் நிறைவேற்றியது.. அதிமுக ஆட்சிக்கு எதிராக வாக்களித்தவர் ஓபிஎஸ்..
கட்சிக்கும் விசுவாசமாக இல்லை.. ஆட்சிக்கும் விசுவாசமாக இல்லை.. பச்சோந்தியை விட அதிகமாக கலர் மாறுபவர் ஓபிஎஸ்… ஜெயலலிதாவுக்கோ அல்லது அதிமுகவுக்கொ அவர் விசுவாசமாக இருந்ததில்லை.. ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக தொண்டன் எப்படி மன்னிப்பான்..? கீழ்த்தரமான எண்ணத்தில் இருக்கும் போது, திமுகவுக்கு உடந்தையாக இருக்கும் போது ஓபிஎஸ்-ஐ எப்படி தொண்டர்கள் மன்னிப்பார்கள்..? அதிமுகவுக்கு ஓபிஎஸ் தேவையில்லை..” என்று தெரிவித்தார்..
தொடர்ந்து திமுக அரசை விமர்சித்த எடப்பாடி பழனிசாமி “ திமுகவை பொறுத்த வரை ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு .. அது தான் அவர்களின் நிலைப்பாடு. ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினர்.. ஆனால் ஓராண்டுக்கு மேல் ஆகியும் அதை செய்யவில்லை.. பொய் கூறி ஆட்சிக்கு வந்துள்ளனர்.. இதுகுறித்து மக்கள் கேள்வி கேட்க தொடங்கிவிட்டனர்..” என்று தெரிவித்தார்..