சென்னை அருகே ஏகாடூர் பகுதியில் வசித்து வருபவர் காயத்ரி தேவி. இவர், ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் மக்களவை உறுப்பினருமான ஓ.பி.ரவீந்திரநாத், தனக்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறி புகார் அளிக்க வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த 2014ஆம் ஆண்டு தனது தோழியின் திருமணத்தில் ஓபிஎஸ் மகள் கவிதா, அவரது சகோதரர் ரவீந்திரநாத் மற்றும் அவரது மனைவி ஆனந்தி ஆகியோருடன் நட்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு தனக்கு விவாகரத்து ஆனதை அறிந்த ரவீந்திரநாத், கடந்த அக்டோபர் மாதம் முதல் தனது நண்பர் முருகன் என்பவர் மூலமாக தனக்கு தொல்லை கொடுத்து வருவதாக குற்றம்சாட்டினார். மேலும், அவர் தனது வாட்ஸ் அப் மூலமாக மிக அநாகரீகமான வார்த்தைகளில் தன்னை வர்ணிப்பதாகவும் கூறினார். அவரது விருப்பத்திற்கும் இணங்காததால் தன்னை குடும்பத்துடன் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வருவதாகவும், இது குறித்து ஏற்கனவே தாம்பரம் ஆணையரிடம் புகார் அளித்ததாகவும், ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
ஏப்ரல் 1 ஆம் தேதி ரவீந்திரநாத்தின் எண்ணில் இருந்து எனக்கு ஃபோன் வந்தது. நானும் எடுத்துப் பேசினேன். நன்றாகப் பேசி வந்த அவர் ஒரு கட்டத்தில், என்னிடம் ரொம்ப ஆபாசமாக பேசத் தொடங்கி விட்டார். இதற்கு நான் சம்மதிக்காமல் எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால், அவர் என்னைக் திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். நான் உடனடியாக ஃபோனை கட் செய்துவிட்டேன். ஆனால், ஆபாச வீடியோ காலில் வா.. என்று தொடர்ந்து அழைத்துக்கொண்டே இருந்தார். அம்மாவுக்கும், தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா? எந்த மாதிரியான எண்ணத்தில் அவர் வீடியோ கால் வர சொன்னார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.
தன்னிடம் போதுமான ஆதாரம் இருந்தும் இதுவரை அரசியல் செல்வாக்கு உள்ளதால் எந்த
நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்கள். இதனால் டிஜிபியை சந்தித்து புகார் அளிக்க வந்ததாக காயத்ரி கூறினார். ஆனால், டிஜிபி அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால்
நாளை காலை எனது புகாரை அளிக்க உள்ளதாக காயத்ரி கூறினார்.