தேனி எம்.பி. ஓபி ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பு தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில், தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனை வீழ்த்தி வெற்றி பெற்றார். அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மறைத்துள்ளதாகவும், எனவே தேனி தொகுதியில் அவர் வெற்றி பெற்றதை செல்லாது என அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளரான மிலானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எம்.பி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். சாட்சி கூண்டில் ஏறி கேள்விகளுக்கு பதிலளித்த ரவீந்தரநாத், தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். அதேபோல் தேர்தல் அதிகாரிகள் முன் ஆஜராகி ஆவணங்களையும் அளித்திருந்தார். இந்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மீண்டும் சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார். வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் தரப்பு தெரிவித்தது.
தேனி எம்.பி ரவீந்திரநாத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் ஒப்புதல் அளித்தார். ஜூன் 28ஆம் தேதி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி சுந்தர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் தேதி ரவீந்திரநாத் நேரில் ஆஜராகி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தார். தனது தரப்பு வழக்கறிஞர் கேட்ட கேள்விகளுக்கு சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் அளித்தார் தேனி எம்.பி ரவீந்திரநாத். தொடர்ந்து, மனுதாரர் மிலானி தரப்பு வழக்கறிஞர் நடத்திய குறுக்கு விசாரணைக்கும் பதில் அளித்தார்.
இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் சற்று முன்பு அறிவிக்கப்பட்டது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் வெற்றி பெற்ற ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஓபிஎஸ் மகனின் தேர்தல் வெற்றி செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.