அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்பட்டு வந்த கோவை செல்வராஜ், திமுகவில் இணைந்து கொண்டார்.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் என அதிமுக பிளவுபட்டுள்ளது. இதையடுத்து, இரண்டு தரப்பு நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அப்போது ஓபிஎஸ்யின் வலதுகரமாக இருந்த கோவை செல்வராஜ் எடப்பாடி அணியினருக்கு பதிலடி கொடுத்து கருத்துகளை பதிவு செய்து வந்தார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு கோவை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கோவை செல்வராஜ் நீக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை ஓபிஎஸ் கோவை மாவட்டத்திற்கு நியமித்தார். இதன் காரணமாக ஏற்பட்ட அதிருப்தியால் அதிமுகவில் இருந்து விலகுவதாக கோவை செல்வராஜ் அறிவித்தார்.
அதிமுகவின் வளர்ச்சிக்காக ஓபிஎஸ்-இபிஎஸ் செயல்படவில்லை எனவும், அனைவரும் சுயநலமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், கோவை செல்வராஜ் திமுகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியான நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் கோவை செல்வராஜ் இணைந்துக்கொண்டார். அவரை வரவேற்கும் விதமாக முக.ஸ்டாலின், திமுக கரை வேட்டி கொடுத்து வரவேற்றார்.