கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி ஆகஸ்ட் 1ஆம் தேதி ஓபிஎஸ் தரப்பு போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கடந்த 2017 ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகுதூர் கொலை செய்யப்பட்டு அங்குள்ள முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் சந்தேகப்பட்ட ஓட்டுநர் கனகராஜ், சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ், காவல் உதவி ஆய்வாளர் என மொத்தமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்கள் நடந்து 6 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.
தற்போது வரை குற்றவாளிகள் யார் என காவல்துறையினரால் கண்டறியப்படவில்லை. விசாரணை செய்யும் அமைப்புகள் தான் மாறுகிறதே தவிர இன்னும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. அங்கு காணாமல் போன விஸ்வ பகதூர் எனும் காவலாளியையும் இன்னும் போலீசார் கண்டறிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் 90 நாட்களுக்குள் கோடாநாடு, கொலை கொள்ளை சம்பவம் தொடர்பான உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என தற்போதைய முதல்வர் முக.ஸ்டாலின் அன்று தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.
கோடநாடு விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் புதிய குற்றவாளிகளின் கண்டுபிடிக்க வேண்டியது காவல்துறையின் பொறுப்பு. அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்களின் பொறுப்பு” என்றார். இரட்டை இலை விவகாரம் குறித்து பேசுகையில் இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் தீர்ப்பு வரும் வரை காத்திருக்கிறோம் என்று தெரிவித்தார்.