அதிமுக அலுவலகத்திற்கு வர ஓ.பன்னீர்செல்வத்துக்கு எந்த முகாந்திரமும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அதிமுக தொண்டர்களின் கோயிலாக உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் சூறையாடி பொருட்களை சேதப்படுத்தியதோடு, சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால், அதிமுக அலுவலகத்திற்கு வருவதற்கு ஓபிஎஸ்-க்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஓபிஎஸ் வருகை என்பது சட்டவிரோதம். இதனால் அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என டிஜிபி-யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. டிஜிபி-யிடம் புகார் கொடுத்தது போல், அடுத்ததாக சென்னை காவல் ஆணையரிடமும் புகார் கொடுக்க உள்ளோம். உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, ஓபிஎஸ் அடிப்படை உறுப்பினர் இல்லை. சசிகலாவை வைத்தியலிங்கம் சந்தித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வெற்றிலை பாக்கு கொடுத்து அழைப்பது போல இவர்கள் சாக்லேட் கொடுத்து அழைக்கிறார்கள். சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். அதிமுக அலுவலகத்தை சூறையாடியவர்களை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பிய ஜெயக்குமார், கட்சியின் பெயரை ஓபிஎஸ் பயன்படுத்துவது தவறு என்றும் அவர் உறுப்பினர் கூட இல்லை என்றும் விளக்கமளித்தார்.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்விக்கு பதிலளித்த அவர், அதிமுக கிளை கழக தொண்டன் ஒருவர் கூட திமுகவுக்கு செல்ல மாட்டார்கள். வேறு எந்த கட்சிக்கும் செல்ல மாட்டார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தான் திமுகவின் பீ டீம்” என்று சாடினார்.