நாங்கள் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில், ”கூட்டணியில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இந்திய திருநாடு சுபிட்சையோடு இருக்க வேண்டும். அதற்கான காரியங்களை தொண்டர்கள் உரிமை மீட்பு குழு செய்யும்.
10 ஆண்டு காலம் நரேந்திர மோடி இந்திய நாட்டின் பிரதமராக இருந்து பல நல்ல திட்டங்களை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் வளர்ச்சி பெற்ற 200 நாடுகளுக்கும் இந்திய நாட்டின் பெருமையை எடுத்துச் சென்றிருக்கிற பெருமை அவரை சேர்ந்திருக்கிறது. 3-வது முறையாக நரேந்திர மோடி நாட்டினுடைய பிரதமராக வரவேண்டும்.
பிரதமர் மோடி சென்னைக்கு வந்தாலும் சரி, மதுரைக்கு வந்தாலும் சரி நான் வரவேற்கிற இடத்தில் இருப்பேன். எங்களுடைய நோக்கம் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வரவேண்டும் என்பது தான். தற்காலிக தீர்ப்பாக தான் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் இரட்டை இலை வழங்கப்பட்டது. வழக்கு இன்னும் நிலுவையில் தான் உள்ளது. நாங்கள் உறுதியாக இரட்டை இலை சின்னத்தில் தான் போட்டியிடுவோம்.
சென்னை சிவில் நீதிமன்றத்தில் இரட்டை இலை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் தீர்ப்பு தான் இறுதி தீர்ப்பு என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. பாஜக உடனான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது” என்றார்.
Read More : Deputy CM | செம ட்விஸ்ட்..!! துணை முதல்வர் பதவி கேட்கும் பாமக..!! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி..!!