போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கும் அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
2019ம் ஆண்டின் திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்கும் வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணையை திறம்பட அமல்படுத்தக்கோரி மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மேலும், அபராதத் தொகையை உயர்த்தியதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுவதால் வாகன தணிக்கையில் ஈடுபடுவதை போக்குவரத்து மற்றும் காவல் துறைகளை சேர்ந்தவர்கள் தயக்கம் காட்டுவதாகவும், இதை சாதகமாக பயன்படுத்தி விதிமீறி வாகனங்களை இயக்குவது தொடர்வதாகவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசாணை முழுமையாக அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அனிதா விளக்கம் அளித்தார். இதையடுத்து, போக்குவரத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், குறிப்பிட்டு எந்த சம்பவத்தை மனுவில் தெரிவிக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், போக்குவரத்து விதிமீறலைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று கூறி, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.