தமிழ்நாடு பதிவுத்துறை தலைவருக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் சொத்துக்களை வாங்கும் மக்கள், அதன் முந்தைய அசல் ஆவணத்தை பதிவு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற பதிவுத்துறையின் 55A வில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. ஆனால், இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அசல் ஆவணங்களை தவறவிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் பொதுமக்களிடம் உள்ள தனிநபர் சம்பந்தமான அசல் ஆவணங்கள் இல்லையென்றாலும், பதிவுத்துறை பாதுகாத்து வைத்திருக்கும் பொது ஆவணத்தின் அடிப்படையில் வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகளை உறுதி செய்து பதிவு செய்ய வேண்டும் என பல உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பதிவுத்துறை மேல்முறையீடு தாக்கல் செய்தது. ஆனால், இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.
இந்நிலையில், பதிவுத்துறையின் கூடுதல் துணைத் தலைவர், நீதிமன்றங்களின் உத்தரவை கடைபிடிக்க அறிவுறுத்தி, அனைத்து மண்டல பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் நிர்வாகம் மற்றும் தணிக்கை சார் பதிவாளர்களுக்கும் கடிதம் எழுந்தியிருந்தார். ஆனால், அந்த கடிதத்தில் வழிமுறைகள் குறித்த சரியான புரிதல் மற்றும் தெளிவுரையும் இல்லையென புகார் எழுந்தது. இது சம்பந்தமாக பெயிரா கூட்டமைப்பின் சார்பாக 11.02.2025 அன்று விரிவாக பதிவுத்துறைக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அந்த கடிதத்தில், ”சார் பதிவாளர்களுக்கு அசல் ஆவணங்களின்றி பதிவு செய்வது குறித்த விஷயத்தில் ஏற்கனவே தெளிவான புரிதல் இல்லை. ஆனால், பதிவுத்துறை கூடுதல் துணைத் தலைவரின் கடிதம் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அசல் ஆவணங்களின்றி சொத்துக்களை பதிவு செய்யலாம் நீதிமன்ற உத்தரவினாலும் மற்றும் பதிவுத்துறை கூடுதல் துணைத் தலைவரின் கடிதத்தின் அடிப்படையிலும் அசல் ஆவணங்கள் பொதுமக்களிடம் இல்லை என்றாலும் பதிவுத்துறையால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தின் அடிப்படையில் பதிவு செய்யலாம் என்கிற உத்தரவால் மக்கள் நிம்மதி அடைந்திருந்தனர்.
ஆனால், தற்போது பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையால், பொதுமக்களும் குழப்பம் அடைந்து அவர்களின் சொத்துக்களை விற்க முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு, பொருளாதார ரீதியில் பெருமளவில் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும், அசல் ஆவணங்களை தவறவிட்ட மக்கள் தங்களின் ஆவணங்களை பதிவு செய்ய முடியாததால், பதிவுத்துறைக்கு வரும் வருவாயும் பெருமளவில் குறைந்துள்ளது. எனவே, பதிவுத்துறையில் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் பொது ஆவணங்களை சரிபார்த்து பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த வழிகாட்டி நெறிமுறைகளுடன் சுற்றறிக்கையினை வெளியிட்டு உதவிட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.