அமெரிக்காவில் சொகுசு கப்பலில் நோரோ என்ற வைரஸ் நோய் தாக்கியதில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குனார்ட் லைன்ஸின் குயின் மேரி 2 என்று அழைக்கப்படும் சொகுசு கப்பல், இங்கிலாந்திலிருந்து கிழக்கு கரீபியனுக்குச் செல்கிறது. கப்பலில் மொத்தமாக 2,538 பயணிகளும் 1,232 பணியாளர்களும் இருந்துள்ளனர். அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கப்பலில் மொத்தமாக 224 பயணிகள் மற்றும் 17 பணியாளர்கள் வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸின் முக்கிய அறிகுறிகளாக வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவை இருப்பதாக தெரியவந்துள்ளது.
நோரோ வைரஸ் என்றால் என்ன? கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும் தொற்றுநோய். மாசுபட்ட உணவு அல்லது நீர் முலம் அல்லது அசுத்தமான மேற்பரப்புகள் மூலம் இவை பரவுகின்றன. பாதிக்கப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது இவை பரவலாம்.
நோரோ வைரஸ் தொற்றுக்கு பிறகு 12 முதல் 48 மணி நேரத்துக்கு பிறகு வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வாந்தி ஆகியவை தொடங்குகிறது. நோரோ வைரஸ் 1 முதல் 3 நாட்கள் வரை நீடிக்கும். பெரும்பாலான மக்கள் சிகிச்சையின்றி முழுமையாக குணமடைகின்றனர். எனினும் சிறு குழந்தைகள் பெரியவர்கள் மற்றும் பிற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு கடுமையாக இருக்கும். இதனால் நீரிழப்பும் மருத்துவ கவனிப்பும் தேவை.
நோரோ வைரஸ் அறிகுறிகள் :
குமட்டல்
வாந்தி
வயிற்று வலி அல்லது பிடிப்புகள்
வயிற்றுப்போக்கு (நீர் அல்லது தளர்வான முறை)
உடல் வலி
அதிக வெப்பநிலை
தசை வலி
அறிகுறிகள் மோசமாகும் போது நீரிழப்பு ஏற்படலாம்
நோரோ வைரஸ் ஆபத்து யாருக்கு அதிகம்? தொற்று உள்ள ஒருவரால் உணவு கையாளப்பட்ட இடத்தில் சாப்பிடுவது குழந்தைகள் பள்ளி, நர்சரி பள்ளி அல்லது குழந்தை பராமரிப்பு மையத்தில் கலந்து கொள்வது, முதியோர் இல்லங்கள். நெருக்கமான இடங்களில் வசிப்பவர்கள், ஹோட்டல், உணவகங்கள், ரிசார்ட், கப்பல் போன்ற நெருக்கமான இடங்களில் நோரோ வைரஸ் தொற்று உள்ள ஒருவருடன் தொடர்பு கொள்ளும் போது பெரும்பாலான மக்களுக்கு பரவலாம். இது சில நாட்களுக்குள் மறைந்துவிடும் உயிருக்கு ஆபத்தானது அல்ல, ஆனால் பலவீனமானவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகளுக்கு தொற்று கடுமையாக இருக்கலாம். நீரிழப்பு திவீரமானால் மரணத்தையும் உண்டு செய்யலாம்.