உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியின் ஆன்டி-ரெட்ரோவைரல் தெரபி (ART) மையத்தின் அறிக்கையின்படி, பிரசவத்திற்காக வந்த 81 கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்ஐவி இருப்பது உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அதிக எண்ணிக்கையிலான எச்ஐவி பாதிப்பு வெளிசத்திற்கு வந்தது. இதிலும் குறிப்பாக எச்ஐவி பாதித்த 81 பெண்களில், குறைந்தது 35 பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர். 2022-23 க்கு இடையில், இந்த மருத்துவக் கல்லூரியில் கர்ப்பிணிப் பெண்களிடையே 33 புதிய எச்ஐவி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜூலை 2023 வரை 13 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக, 35 கர்ப்பிணிப் பெண்கள் ஏற்கனவே எச்ஐவியால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், எச்ஐவியால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் மருத்துவக் கல்லூரியின் ஏஆர்டி மையத்தில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளதாக மருத்துவக் கல்லூரி அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இதேபோல், பிறந்த குழந்தைகளுக்கு 18 மாதங்கள் நிறைவடைந்தவுடன் எச்ஐவி பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஏஆர்டி மையத்தின் நோடல் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மீரட்டின் தலைமை மருத்துவ அதிகாரி (சிஎம்ஓ) டாக்டர் அகிலேஷ் மோகன் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மீரட்டின் லாலா லஜ்பத் ராய் மருத்துவக் கல்லூரியில் 60 பெண்களுக்கு எச்ஐவி பாதிப்பு இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருப்பினும், அனைத்து பெண்கள் மற்றும் பிறந்த குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர்” என்று தெரிவித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் எங்களிடம் இல்லை. பாதிக்கப்பட்ட பெண்களின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு எச்ஐவி எப்படி வந்தது என்பதற்கான காரணங்களைக் கண்டறிய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எச்ஐவி பாதிக்கப்பட்ட இரத்தம், விந்து அல்லது யோனி திரவங்கள் உடலுக்குள் நுழையும் போது HIV பரவுகிறது. இது உடலுறவின் போதுஅல்லது மருந்துகளை உட்செலுத்துவதற்கு அல்லது பச்சை குத்துவதற்கான ஊசிகளைப் பகிர்வதன் மூலம் மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் இரத்தத்துடன் ஊசியில் சிக்கிக்கொள்வதன் மூலம் பரவலாம். கர்ப்பம், பிரசவம் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி. பரவுகிறது.