உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் மற்றும் ராம் லாலாவின் சிலை பிரதிஷ்டை நிகழ்வு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்வில் முக்கிய அரசியல் தலைவர்கள் சினிமா நட்சத்திரங்கள் விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழிலதிபர்கள் என பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
நேற்றைய கும்பாபிஷேக நிகழ்விற்கு பின் பொது மக்களின் பார்வைக்காக ராமர் கோவில் இன்று திறக்கப்பட்டது. பல லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் கோவிலுக்குள் நுழைய முயன்றதால் கூட்ட நெரிசலில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு பக்தர் மயக்கம் அடைந்ததாகவும் உத்திரபிரதேச காவல்துறை தெரிவித்திருக்கிறது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து யோகி ஆதித்யநாத் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் ராமர் கோவிலின் பாதுகாப்பு பணிகள் மற்றும் கூட்ட நெரிசலை காவல்துறை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஹெலிகாப்டரில் ஆய்வு செய்து இருக்கிறார் யோகி.
பொதுமக்களின் பார்வைக்காக இன்று ராமர் கோயில் திறக்கப்பட்டதும் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய முற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை சமாளிக்க முடியாமல் காவல்துறையினர் திணறி வருகின்றனர். இதனால் துணை ராணுவ படையினரும் கோவில் பாதுகாப்பு பணிகளிலும் பக்தர்களை கட்டுப்படுத்தும் பணியினிலும் ஈடுபட்டு வருவதாக உத்திரபிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
ராமர் கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மிகுந்த கோபம் அடைந்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து கோவிலின் பாதுகாப்பு பணிகள் மற்றும் பக்தர்களை கையாளும் விதம் குறித்து நேரடியாக ஹெலிகாப்டரில் ஆய்வு செய்ததாக உத்திரபிரதேச அரசு தெரிவித்து இருக்கிறது. பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அவர்களை சமாளிப்பதில் பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பேசியிருக்கும் உத்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் பிரசாத் மயூரா ” பக்தர்கள் யாரும் முண்டியடித்துக் கொண்டு வர வேண்டாம் என கேட்டுக் கொண்டிருக்கிறார். நீண்ட வனவாசத்திற்குப் பிறகு வீடு திரும்பியிருக்கும் ஸ்ரீ ராமர் அவரது இல்லமான ராமர் கோவிலில் தான் இருக்கப் போகிறார். எப்போது வேண்டுமானாலும் அவரை தரிசித்துக் கொள்ளலாம். இப்போது பக்தர்கள் யாரும் முண்டியடித்துக் கொண்டு வர வேண்டாம். மெதுவாக வாருங்கள் ஸ்ரீ ராமர் எங்கேயும் செல்ல மாட்டார்” எனத் தெரிவித்து இருக்கிறார்.