கடினமாக ஒர்க்-அவுட் (உடற்பயிற்சி) செய்வதால் என்னென்ன பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
உடல் எடையைக் குறைக்கும் ஆர்வம் பலரிடம் தோன்றியிருப்பதைக் காண முடிகிறது. சிலருக்கு உடனே உடல் எடையை குறைத்துவிட வேண்டும் என்கிற பேராசையும் உண்டு. இதனால் தங்களால் முடியவில்லை என்றாலும் கடின உழைப்பைக் கொடுத்து உடற்பயிற்சிகளை மேற்கொள்கின்றனர். அவ்வாறு செய்வதால் என்னென்ன பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் தெரியுமா..? வல்லுநர்கள் ஒரு நாளைக்கு 30 – 40 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியை தினமும் கடைபிடித்து வந்தாலே போதுமானது என்கின்றனர்.
அதிக களைப்பு : நீங்கள் அதிக உடற்பயிற்சி மேற்கொள்வதால் தொடர்ந்து அடுத்தடுத்த பயிற்சிகளை செய்யமுடியாமல் போகும். அதோடு நாள் முழுவதும் களைப்பாக உணர்வீர்கள். என்னதால் 7-8 மணி நேரம் நல்ல உறக்கம், ஆரோக்கியமான காலை உணவு என சாப்பிட்டாலும் களைப்பாக உணர்வீர்கள். எனவே உடலுக்கு அதிக அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதை தவிருங்கள்.நீங்கள் கடினமான உழைப்பை அளிக்கும்போது தசைகள் ஆற்றலை இழக்கத் தொடங்கும். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக உங்களின் பயிற்சியின் வேகமும் குறையும். கடினமான உடற்பயிற்சி உள்காயம், தசைவலி, முதுகுவலி, மூட்டு வலி போன்றவற்றை உண்டாக்கும். இதனால் மறுநாள் பயிற்சி செய்ய முடியாமல் போகலாம்.
அதிகம் உடற்பயிற்சியினால் தசைகள் மிகுந்த அழுத்தத்தில் இருக்கும். இதனால் உங்களுக்கு உடனே தூக்கம் வராமல் அவஸ்தையாக இருக்கும். தசைகள் இலகுவாகி ஓய்வுக்குச் சென்றால்தான் தூக்கம் வரும். டோப்பமைன் அதிகமாக சுரக்கத் தொடங்கும். இதனால் ஹார்மோன் மாற்றங்கள் மனதளவில் பாதிப்பை உண்டாக்கும். அதேபோல் கார்ட்டிசோல் அளவும் அதிகரிக்கும். இதனால் ஆன்சைட்டி, மன அழுத்தம், மனம் ஒருநிலையில் இல்லாமை போன்ற பிரச்னைகள் வரக்கூடும்.