ட்ரோன் வாயிலாக இந்திய எல்லைக்குள் பயங்கரவாதியை அனுப்பும் முயற்சியை பாகிஸ்தானின் லஷ்கர் – இ – தொய்பா அமைப்பு மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் அவ்வப்போது போதைப் பொருட்கள் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் வாயிலாக நம் நாட்டின் எல்லைப் பகுதிக்கு அனுப்புவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஐம்மு – காஷ்மீர் பஞ்சாப் உள்ளிட்ட எல்லை பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் நடத்தப்படும் இந்த செயல்களை நம் பாதுகாப்புப் படையினர் முறியடித்து வருகின்றனர். இதுவரை பொருட்கள் மட்டுமே அனுப்பப்பட்டு வந்த நிலையில் ட்ரோன் வாயிலாக பயங்கரவாதியை அனுப்பும் முயற்சியையும் பாக்.கின் லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாத அமைப்பு மேற்கொண்டுள்ளது.
அதாவது பாகிஸ்தானில் உள்ள அந்த பயங்கரவாத அமைப்பின் முகாமில் இதற்காக மேற்கொள்ளப்பட்ட பயிற்சி தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி உள்ளது. இதில் ட்ரோன் வாயிலாக பறந்து வரும் நபர் சில நிமிடங்களுக்குப் பின் அங்குள்ள நீர்நிலையில் குதித்து கரையேறும் காட்சி இடம் பெற்று உள்ளது. இதற்காக பிரத்யேகமாக 70 கிலோ எடையைத் தாங்கக் கூடிய ட்ரோன்களை பயங்கரவாதிகள் வடிவமைத்துள்ளதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையே ட்ரோன் வாயிலாக எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனரா என பாதுகாப்பு படையினர் விசாரித்து வருகின்றனர்.