பஹல்காமில் நடந்த தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம் என்று மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்துள்ளார்.
”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் பாகிஸ்தான் முகாம்கள் மீது இன்று அதிகாலை இந்திய ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதேபோல் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்தும் இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து 9 இடங்களில் வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை. மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாபிற்கு பயிற்சி அளித்த முகாம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 24 தீவிரவாத முகாம்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “பஹல்காமில் நடந்த தாக்குதல் மிகவும் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் நெற்றியில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட விதம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் இயல்புநிலை திரும்புவதை சீர்குலைக்கும் நோக்கத்துடன் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தியாவுக்கு எதிரான மேலும் தாக்குதல்கள் நடத்தவிருப்பதாக எங்கள் உளவுத்துறை சுட்டிக்காட்டியது. இதனால், அதனை தடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். எனவே, இன்று அதிகாலையில் இதுபோன்ற எல்லைத்தாண்டிய பயங்கரவாதத்தை தடுக்க இந்தியா பதிலடி கொடுத்தது. எங்கள் பதில் தாக்குதல்கள் முறையாக திட்டமிடப்பட்டன. பயங்கரவாதிகளின் உள்கட்டமைப்பை அழிப்பதில் இந்திய ராணுவத்தினர் கவனம் செலுத்தினர்.
பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தானின் தொடர்பு இருப்பது தெரியவந்தது. தீவிரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் இருப்பது சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்டது. திருப்பித் தாக்கும் உரிமையை இந்தியா பயன்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் குறித்து உளவுத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
Read More : Operation Sindoor | “இந்திய ராணுவத்தினருக்கு ராயல் சல்யூட்”..!! தவெக தலைவர் விஜய் பதிவு..!!