அமெரிக்காவின் மூத்த அணு விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பாகிஸ்தானிடம் தற்போது 170 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த வேகத்தில் பாகிஸ்தான் தனது அணு ஆயுத கையிருப்பைத் தொடர்ந்து அதிகரித்தால், 2025ஆம் ஆண்டுக்குள் அந்நாட்டிடம் இருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 200 ஆக அதிகரிக்கும். சமீபத்தில் வெளியிடப்பட்ட அணு விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கை ஒன்றில், அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் குறுகிய மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் பாகிஸ்தான் நாட்டின் எந்தெந்த பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் அவற்றின் ஏவும் திறன்கொண்ட லாஞ்சர்கள் ஆகியவை இஸ்லாமாபாத்தின் மேற்கு பகுதியில் கலா சிட்டா தஹார் மலைத்தொடரில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு வளாகத்தில் தயாரிக்கப்படுகின்றன. ஃபட்டா ஜாங்கின் வடகிழக்கு பகுதியில், அந்த ஆயுதங்களை சாலை வழியாக எடுத்துச் செல்வதற்கான வழிவகைகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் ஏவுகணைகள் :
இந்திய எல்லைக்கு அருகே நிறுவப்பட்டுள்ள 4 அல்லது 5 குறுகிய தூர ஏவுகணைகள் உட்பட பாகிஸ்தான் முழுவதும் 8-9 ஏவுகணை தளங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் உள்பகுதியில் உள்ள ராணுவ தளங்களில் நடுத்தர தொலைவு சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இதுபோல் 3 அல்லது 4 ராணுவ தளங்கள் உள்ளன.
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட குறைந்தபட்சம் ஐந்து ஏவுகணை தளங்கள் பாகிஸ்தானில் வர்த்தக ரீதியிலான செயற்கைக்கோள்களின் படங்கள் காட்டுகின்றன. இந்த ஐந்து ஏவுகணை தளங்களின் பட்டியலைப் பார்ப்போம். அக்ரோ ராணுவ தளம் சிந்து மாகாணத்தில், ஹைதராபாத்தில் இருந்து வடக்கே 18 கிமீ தொலைவிலும், இந்திய எல்லையில் இருந்து 145 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை
அணு விஞ்ஞானிகள் அளித்துள்ள ஆய்வறிக்கையின்படி, பாகிஸ்தானிடம் தற்போது அணு ஆயுதம் தாங்கும் திறன் கொண்ட 6 ஏவுகணைகள் பயன்படுத்தக் கூடியவையாக உள்ளன. இரண்டு அணு ஆயுத திறன் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றன. 2021இல் பாகிஸ்தான் தின அணிவகுப்பில் அனைத்து அணுசக்தி திறன் கொண்ட ஏவுகணைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 20 ஆண்டுகளில், சாலையில் பயணிக்கக் கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கான லாஞ்சர்கள் தயாரிப்பில் பெரிய அளவில் வளர்ச்சியும், விரிவாக்கமும் ஏற்பட்டுள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஏவுகணைகளுக்கு பாகிஸ்தானிடம் எத்தனை தளங்கள் உள்ளன என்பதை உறுதியாக கூற முடியாது.
அக்ரோ ராணுவ தளம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஹைதராபாத்தில் இருந்து வடக்கே 18 கிமீ தொலைவிலும், இந்திய எல்லையில் இருந்து 145 கிமீ தொலைவிலும் அக்ரோ ராணுவ தளம் அமைந்துள்ளது. இங்கு 6 ஏவுகணை கேரேஜ்கள் உள்ளன. அவை 12 ஏவுகணைகளுக்காக கட்டப்பட்டுள்ளன. பாபரின் க்ரூஸ் ஏவுகணையின் வீச்சு திறன் 450 முதல் 700 கிலோ மீட்டர்கள் ஆகும். கடலுக்கு அடியில் இருந்து ஏவுவதற்கான ஏவுகணையையும் பாகிஸ்தான் தயாரித்து வருகிறது.
குஜ்ரன்வாலா ராணுவ தளம்
குஜர்வாலா ராணுவ தளம் பாகிஸ்தானின் மிகப்பெரிய ராணுவ வளாகமாக உள்ளது. இது பஞ்சாப் மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் 30 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்திய எல்லையில் இருந்து அதன் தூரம் 60 கிமீ ஆகும். செயற்கைக்கோள் படங்களில் காணப்படும் ஏவுகணை லாஞ்சர்கள், அவை குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய நாசர் ஏவுகணைகளுக்கானவை என்பதைக் காட்டுகின்றன. நாசர் ஏவுகணை 60 கிமீ தொலைவுக்குச் சென்று தாக்கக்கூடியதாக உள்ளது.
இட்சி ஏவுகணை தளம்
இந்த ஏவுகணை தளம் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சக்கருக்கு மேற்கே 220 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்திய எல்லையில் இருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள ஏவுகணை தளங்களில் இதுவும் ஒன்று. அக்ரோவைப் போலவே இங்கும் அணு ஆயுதங்களை சேமித்து வைக்க நிலத்தடி கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. செயற்கைக்கோள் படங்களில் காணப்படும் ஏவுகணைகள் இவை அணு ஆயுத திறன் கொண்ட கௌரி அல்லது ஷாஹீன்-2 ஏவுகணைக்கானவை என்பதைக் காட்டுகின்றன.
சர்கோதா ஏவுகணை தளம்
1983 மற்றும் 1990 க்கு இடையில், பாகிஸ்தான் தனது அணுசக்தி திட்டத்திற்காக கிரானா மலையில் அமைந்துள்ள இந்த பெரிய வளாகத்தை பயன்படுத்தியது. இது சாலைவழியாக ஏவுகணைகளை எடுத்துச் சென்று, அவற்றை நிமிர்த்தி தாக்கும் வல்லமை பெற்ற 10 கேரேஜ்கள் மற்றும் வேறு வகையான இரண்டு கேரேஜ்கள் பராமரிப்புக்காக பயன்படுத்தப்படுகிறது.
பனோ அகில் ஏவுகணை தளம்
சிந்து மாகாணத்தில் இந்திய எல்லையில் இருந்து 60 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ராணுவ தளத்தில் லாஞ்சர்களின் கேரேஜ்கள் மற்றும் வால்கள் தெரிகின்றன. இவை பாபர் மற்றும் ஷாஹீன்-1 ஏவுகணைகளுக்கானவை என்பதை இந்தப் படங்கள் காட்டுகின்றன.
தரை மற்றும் கடலில் இருந்து ஏவும் வகையிலான ஏவுகணைகள்
பாபர் (Hatf-7) என்பது அமெரிக்காவின் டோமாஹாக் ஏவுகணையைப் போன்றது. அதன் வேகம் ஒலியை விட குறைவாக இருக்கும். இது கடலில் இருந்து ஏவப்படும் குரூஸ் ஏவுகணையாகும். தரையில் இருந்து ஏவக்கூடிய பாபர்-1 ஏவுகணையின் வீச்சு 600 முதல் 700 கிமீ ஆகும். இருப்பினும், அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் அதன் வரம்பை 350 கிலோமீட்டர்களாக மதிப்பிட்டுள்ளன.
பாபர்-2- 700 கிலோ மீட்டர் சென்று தாக்கக் கூடியது. பாபர்-3 க்கும் அதே வீச்சு உள்ளது. ஆனால் இது கடலில் இருந்து ஏவப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பாபர்-3 பாகிஸ்தானின் கான், பாண்டா மற்றும் நரங் ஆகிய 3 நீர்மூழ்கிக் கப்பல்களுடன் பொருத்தப்பட்டிருக்கும். புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டாலும், அவற்றில் அணு ஆயுதம் ஏந்திய பாபர்-3 ஏவுகணைகளை நிலைநிறுத்த முடியும். இதனுடன், பாபர் க்ரூஸ் ஏவுகணையின் மற்றொரு வடிவடிமான ஹர்பாவை பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது. இது 2022 இல் போர்க் கப்பல்களிலும் பயன்படுத்தப்பட்டது.
பாகிஸ்தான் செய்தித் தொடர்பாளர், ஹர்பாவை அனைத்து வானிலையையும் சமாளிக்கும் திறன் கொண்ட சப்சோனிக் (ஒலியைவிடக் குறைவான வேகத்தில் செல்லக்கூடிய) ஏவுகணை என்று வர்ணித்துள்ளார். இது 290 கிலோ மீட்டர் தொலைவுக்குச் சென்று தாக்கும் திறன்பெற்றது.