பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டை வழங்குவதற்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் வருமான வரி செலுத்துவதற்கு ஆதார் எண் கட்டாயம் என்று தீர்ப்பு வழங்கியது. இதன் பிறகு பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களது பான் எண்-ஐ ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
அந்த வகையில், 2023ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் பான் கார்டு – ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என வருமான வரித்துறை திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், பான் – ஆதாரை இணைப்பதற்கான அவகாசம் ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.