ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை பான் கார்டுடன் இணைக்குமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருமான வரி செலுத்துவோர் தங்கள் பான் எண்ணுடன் ஆதாரை இணைத்து வருகின்றனர்.
ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காவிட்டால், ஏப்ரில் 1 முதல் செயலற்றதாகிவிடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது உள்ள நடைமுறையின் படி வங்கிக் கணக்குகள், மற்ற சேமிப்பு மற்றும் வர்த்தக கணக்குகளுக்கும் நாம் செய்யும் பரிவர்த்தனைக்கும் முக்கியானதாக விளங்கப்படுவது பான் கார்டு.
பான் கார்டு செயல் இழந்தால் அதை இணைத்து உருவாக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் முடங்க வாய்ப்புள்ளது. மேலும் வருமானம் பெரும் மக்கள் அதை கணக்கில் காட்ட முடியாது, வருமான வரியும் செலுத்த முடியாது. அனைத்து வகையான நிதி பரிவர்த்தனைகளுக்கான முக்கியமான கே.ஒய்.சி. (உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்) அளவுகோல்களில் ஒன்று பான் என்பதால் அதில் சிக்கல் ஏற்படும். எனவே ஆதார் கார்டுடன் பான் கார்டை உடனே இணைத்து சிக்கல் இல்லாமல் இருப்போம்.