கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் – செந்தமிழ் செல்வி தம்பதி. செந்தமிழ் செல்வி ஊராட்சி மன்ற துணை தலைவராக உள்ளார். இவர்களது மகன் ஜெகன் ஸ்ரீ, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் 24ஆம் தேதி முதல் காணவில்லை என்று பெற்றோர்களும், உறவினர்களும் தேடி வந்த நிலையில், வரஞ்சரம் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், அப்பகுதி இளைஞர்கள் அங்கிருந்த நீர்நிலைகள் வனப்பகுதிகளுக்குள்ளும் அலைந்து திரிந்து தேடியுள்ளனர். ஆனாலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ஆனால், கூத்தக்குடி அருகே சமத்துவபுரம் பகுதியில் 4 இளைஞர்கள் போதையில் தாங்கள் தான் கொலை செய்தோம் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டு கேட்ட சிறுவன் ஓடிவந்து அக்கிராம இளைஞரிடம் கூறியுள்ளான். உடனே இளைஞர்கள் ஒன்று சேர்ந்து அவனை பிடித்து விசாரித்ததில் கொலை செய்து காட்டில் புதைத்துவிட்டதாக கூறியதால் போலீசாருக்கு தகவல் தர, அந்த 4 பேரையும் போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வனக்காட்டு பகுதியில் கொலை செய்து புதைத்திருக்கும் இடத்தையும் காட்டினர். அதன்படி கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீசார் சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காணாமல் போன கல்லூரி மாணவன் வனப் பகுதியில் பிணமாக புதைக்கப்பட்ட செய்தி கூத்தக்குடி கிராமத்தை மட்டுமல்லாது கள்ளக்குறிச்சி மாவட்டத்தையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கஞ்சா விற்பனையை தடுக்க முடியாமல் போலீசார் அலட்சியமாக செயல்பட்டதன் விளைவே இக்கொலைக்கு முக்கிய காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் 4 பேரும் மது அருந்த சென்ற போது ஜெகன் ஸ்ரீ யையும் அழைத்துச் சென்று மது அருந்திவிட்டு ஜெகன் ஸ்ரீக்கும் மது குடிக்க வைத்து கஞ்சா போதையில் பாட்டிலால் தலையில் அடித்தும் பாட்டில் கண்ணாடியால் கழுத்தை அறுத்தும் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.