டெல்லி மாநிலம் மோகன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (38). இவருக்கு சுனிதா என்ற மனைவியும் இரு குழந்தையும் இருந்தனர். ராஜேஷ் ஐஎஸ்ஓ தரச் சான்று வழங்கும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிறுவனம் கொரோனா காலத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்ததால், தொழில் மோசமடைந்து கடன் நெருக்கடிக்கு ஆளான ராஜேஷ், தொழிலை நிறுத்திவிட்டு கடை தொடங்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பிற்பகல் நேரத்தில் தனது மனைவி சுனிதா, 5 வயது மகன், 4 மாத குழந்தை ஆகிய மூவரையும் கத்தியால் குத்திக்கொலை செய்துவிட்டு தனது கை மணிக்கட்டையும் அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.
இச்சம்பவத்திற்கு முன்பு தனது வாட்ஸ் அப் நண்பர்கள் குழுவில் போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். அதில், “நான் கடும் கடன் சுமையில் இருக்கிறேன். கோவிட் லாக்டவுன் காலத்தில் எனது தொழில் பெரும் பாதிப்பு கண்டது. எனது ஊழியர்கள் என்னை ஏமாற்றி வாடிக்கையாளர்களை போட்டி நிறுவனங்களுக்கு அனுப்பி வைத்தனர். பல பேரின் மோசடியால் கடும் பண நெருக்கடிக்கு ஆளாகியுள்ளேன்” என நீண்ட பதிவை எழுதியுள்ளார். இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ராஜேஷின் நண்பர்கள், அவரது சகோதரருக்கு தகவல் தரவே அவர் உடனடியாக ராஜேஷின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, ராஜேஷ் அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் என 4 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். மனைவி, மகன்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ராஜேஷ் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சம்பவம் தொடர்பாக ராஜேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ராஜேஷின் உடல்நிலை சரியானதும், அவரிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் பிரச்சனை குறித்து கணவன்-மனைவி இருவரும் ஒருபோதும் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. எப்போது போலவே மகிழ்ச்சியோடு இயல்பாக இருந்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.