அமெரிக்காவில் முதன்முறையாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்த பெற்றோர்களின் சம்மதம் பெறுவதை கட்டாயமாக்கி சட்டம் இயற்றி யூட்டா மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் இளம்வயதினர் சமூக வலைதளங்களில் அதிக நேரம் செலவிடுவதை தடுக்கும் வகையில் யூட்டா மாகாண அரசு இந்த சட்டத்தை இயற்றியுள்ளது. இதற்கு அம்மாகாண ஆளுநர் ஸ்பென்சர் காக்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார். அதாவது அடுத்தாண்டு மார்ச் மாதம் முதல் இச்சட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களில் கணக்குகளை வைத்திருக்க அவர்களது பெற்றோர் அவசியம் சம்மதிக்க வேண்டும். மேலும் அவர்களது கணக்கை பெற்றோர் முழுவதும் அணுகும் வகையில் இருக்க வேண்டும். முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் செய்திகளை தடுக்க வழிவகை செய்ய வேண்டும் என பல்வேறு அம்சங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த சட்டம் சமூக ஊடகங்களால் சிறுவர்களுக்கு ஏற்படும் தீமைகளை குறைக்க உதவும் என பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.