திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த காய்லர்மேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஜெயலட்சுமிக்கும், கல்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் 2-வது மகளுடன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தன்னுடைய ஜெயலட்சுமி தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கடந்த 14ஆம் தேதி மகள் லக்சனாவுக்கு (2) காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தாய் ஜெயலட்சுமி அங்குள்ள கிளினிக் ஒன்றுக்கு குழந்தையை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு பிரநீத்வர்மா என்பவர் குழந்தையை பரிசோதனை செய்துவிட்டு, அவருக்கு 2 நாட்களுக்கு மூன்று மருந்துகள் எழுதி கொடுத்துள்ளார். அதில் மூன்று வேளைக்கும் 7.5 எம்.எல். சிரப் கொடுக்க வேண்டும் என அட்டையில் எழுதியிருந்தார். அதன்படி, இதை ஒரு நாள் முழுவதும் குழந்தைக்கு ஊற்றியுள்ளனர். மறுநாள் காலையில் குழந்தை அசைவில்லாமல் இருந்ததை கண்டு தாய் அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர், மீண்டும் அதே கிளினிக்குக்கு சென்றபோது, மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அவசர அவசரமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் குழந்தையை அனுமதித்தனர். இந்நிலையில், குழந்தை முழு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அதிகளவில் மருந்து கொடுக்கப்பட்டதால், வயிற்றில் உள்ள கல்லீரல், குடல் போன்றவை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அழுதுகொண்டே வர்மா கிளினிக் முன்பு உறவினர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த கிளினிக் மருத்துவரிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர் தெனாவட்டாக பதில் கூறியுள்ளார். இதனால், அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், முறையாக காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்குமாறும், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தியுள்ளனர். பின்னர், அனைவரும் கலைந்து சென்று புகார் மனு அளித்தனர்.
இச்சம்பவம் குறித்து அரசு மருத்துவர்கள் கூறுகையில், ”2 வயது குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றால், 3 எம்எல் மருந்து மட்டுமே கொடுக்க வேண்டும். அதற்கு அதிகமாக கொடுக்கும்பட்சத்தில், வயிற்றில் உள்ள அனைத்து பகுதிகளையும் அது சேதப்படுத்திவிடும்” என்று எச்சரித்துள்ளனர்.