கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கம்பம்மெட்டு அருகே வண்டன்மேடு என்ற பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவன் அருகில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த இரு தினங்களுக்கு முன்பு பள்ளியில் இருந்து மாலையில் வீடு திரும்பிய மாணவன், படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். போலீஸ் விசாரணையில், மாணவன் விஷம் குடித்த பிறகு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில், மாணவனின் லேப்டாப்பை அவரது உறவினர்களான சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பரிசோதித்தனர்.
அப்போது மாணவன் வீடியோ கேமுக்கு அடிமையாகி இருந்தது தெரியவந்தது. லேப்டாப்பில் இன்டர்நெட்டை ஆன் செய்த நிமிடம் முதல் வீடியோ கேமுடன் தொடர்புடைய மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் லேப்டாப்பின் முழுக் கட்டுப்பாட்டையும் தங்களது வசம் கொண்டு வந்துள்ளனர். பின்னர் அவர்கள் கூறுவது போல் அனைத்து காரியங்களையும் மாணவன் செய்து வந்துள்ளான். மர்ம நபர்கள் பல டாஸ்குகளை மாணவனுக்கு கொடுத்துள்ளனர்.
கடைசியாக இன்டர்நெட்டை ஆன் செய்து தற்கொலை செய்து கொள்ளும்படி கூறி உள்ளனர். அதன்படி, இன்டர்நெட்டில் நேரலையாக ஒளிபரப்பி மாணவன் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.