தெருநாய்கள் கூட்டம் ஒன்று 5 வயது சிறுவனை கடித்துக் கொன்ற நெஞ்சை பதற வைக்கும் துயர சம்பவம் தெலங்கானாவில் அரங்கேறியுள்ளது.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்ற 5 வயது சிறுவன் தனது தந்தையுடன் சென்ற போது இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த துயர சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. அதில் 5 வயது சிறுவன் தனியாக நடந்து செல்கின்றான். அப்போது திடீரென 3 தெருநாய்கள் சிறுவனைச் சூழ்ந்து கொள்கின்றன. இதனால் பதற்றமடைந்த சிறுவன் நாய்களிடமிருந்து தப்பிக்க ஓடுகிறான். ஆனால், நாய்கள் சிறுவனைத் துரத்தி கீழே தள்ளி அவனைச் சூழ்ந்து கொண்டு கடிக்கத் தொடங்குகின்றன. ஒவ்வொரு முறையும் நாய்களிடமிருந்து தப்பிக்க முயன்று சிறுவன் எழுந்த போது எல்லாம் நாய்கள் அவனை கடிக்கின்றன. படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவன் உயிழந்தான்.
இதயத்தை பதறவைக்கும் இந்த சம்பவம் தெருநாய்களால் ஏற்படும் பாதிப்புகளை மீண்டும் கவனம் கொள்ள செய்துள்ளது. முன்னதாக கடந்த சனிக்கிழமை உத்தரப் பிரதேசத்தின் சஹாரன்பூர் பகுதியில் தெருநாய் கடித்து 7 வயது சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அதேபோல் குஜராத்தின் சூரத் பகுதியில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் தெருநாய்க் கடி சம்பவங்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.