சேலம் மாவட்டம் தளவாய்பட்டி பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவர் ரெட்டியூரில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவரது 9 வயது குழந்தையை வீட்டில் பராமரிக்க யாரும் இல்லாததால் அழகாபுரம் பகுதியில் இயங்கிவரும் பிரகாசம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி பள்ளியில் சேர்த்துள்ளார். இந்நிலையில் அங்கு பாலாஜி, அந்தோணி எஸ்டர், திருப்பதி ஆகிய 3 பேர் பிசியோதெரபிஸ்டாக பணிபுரிந்து வருகின்றனர். செவிலியர் அகிலாவின் குழந்தையை கடந்த 5ஆம் தேதி குச்சியால் தாக்கியதாகவும், இதனால் குழந்தையின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், குழந்தை மனநல பாதிக்கப்பட்ட குழந்தை என்பதால் சொல்ல தெரியவில்லை என்பதால், அகிலா நேரடியாக பிரகாசம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான பயிற்சி பள்ளிக்கு சென்று அங்குள்ள வீடியோவை பார்த்தபோது குழந்தை தாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அகிலா தாக்கிய வீடியோ ஆதாரத்துடன் அழகாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, அழகாபுரம் போலீசார், அந்த பயிற்சி பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து அதனையும் விசாரணைக்காக எடுத்துச் சென்றனர். இந்த புகார் தொடர்பாக பிரகாசம் மல்டி Rehabilitation Centre பிசியோ தெரபிஸ்ட் பயிற்சியாளர்கள் நங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த பாலாஜி (28), தாதகாப்பட்டி ஜான்பீட்டர் என்பவரின் மனைவி அந்தோணி எஸ்டர் (28), அழகாபுரம் பகுதியை சேர்ந்த திருப்பதி (29) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். உரிமையாளர் பிரகாசத்தை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தையை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தாக்கிய விவகாரத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கூறுகையில், “குழந்தைகளை நல்ல வகையில் பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இங்கு அனுப்பி வைத்தோம். ஆனால், இவர்கள் குழந்தையை துன்புறுத்துவது நீண்ட நாட்களாக தெரியவில்லை.
சமீப நாட்களாக குழந்தைகள் இங்கு செல்ல மறுத்து வந்தனர். சந்தேகத்தின் பேரில் விசாரித்த போதும் குழந்தைகளை இங்கு துன்புறுத்துவதாக தெரியவந்தது. இதுகுறித்து கேட்டதற்கு மாற்றுத்திறனாளி குழந்தைகளை சற்று பயமுறுத்தி தான் படிக்க வைக்க வேண்டும் என்று கூறினார். ஆனால், இங்கு கடுமையாக குழந்தைகளை அடித்து துன்புறுத்தியது சிசிடிவி காட்சியில் பார்த்தவுடன் மனம் வேதனையாக உள்ளது” என்று தெரிவித்தனர்.