தமிழகத்தில் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடைபெறவுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஆண்டுதோறும் புதிதாக பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து இரண்டு முறை வழங்கப்பட்டு வருகிறது. போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க மத்திய அரசு போலியோ சொட்டு மருந்து முகாம்களை நடத்தி வருகிறது. பொதுவாக இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் போலியோ தடுப்பு மருந்து முகாம் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

அந்த வகையில், நடப்பாண்டில் நாளை (ஜனவரி 4) போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த சுற்றறிக்கைகள் மாவட்ட சுகாதார அலுவலகங்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திக்குறிப்பில், “தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டம் தமிழகத்தில் ஜனவரி 4ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. இந்திய அளவில் சுகாதார திட்டங்களை முதலில் செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் தான் முன்னோடியாக திகழ்கிறது. தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.

இது தவிர மீண்டும் 9-வது மற்றும் 12-வது மாதங்களிலும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி ஜனவரி 4ஆம் தேதி முதல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து தகுதியான குழந்தைகளுக்கு வழங்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பெற்றோர்கள் போலியோ இல்லாத தமிழகத்தை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மாவட்ட சுகாதார அலுவலர்களால் செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.