ஆலங்குளத்தில் இரண்டரை வயது சிறுமி கோமாக்கு சென்றதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இந்நிலையில், குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு தலைமறைவான கல்நெஞ்சம் கொண்ட பெற்றோரை போலீசார் தேடிவருகின்றனர்.
ஆலங்குளம் அண்ணாநகர் 3-வது தெரு 3-வது சந்து பகுதியில் சென்னை பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்ற திலீப் குமார், ஹேமலதா ஆகியோர் ஹாசினி என்ற இரண்டரை வயது குழந்தையுடன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். புதிதாக குடியிருப்பு பகுதிக்கு வந்த நிலையிலும், குழந்தை ஹாசினி 6 மாதங்களிலிலேயே இப்பகுதியில் வசிப்பவர்களை தனது மழலைக் குரலால் பேசி தன் பக்கம் ஈர்த்துள்ளார். அக்கம் பக்கத்தினரும் குழந்தையிடம் மிகவும் அன்பாக நடந்துள்ளனர். அத்தெருவில் வசிப்பவர்களுக்கு செல்லப்பிள்ளையாகவே மாறிப்போனார் ஹாசினி.

இந்நிலையில், குழந்தை ஹாசினி கடந்த டிச.31ஆம் தேதி வீட்டில் தவறி விழுந்ததாகக் கூறி ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தை சுய நினைவின்றி காணப்பட்டதால் அங்கு முதலுதவிக்குப் பின்னர், மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 தினங்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். பெற்றோர் இருவரும் மருத்துவமனையில் குழந்தையுடன் இருந்த நிலையில், திடீரென யாரிடமும் சொல்லாமல், போலீசாரிடமும் தகவல் தெரிவிக்காமல் தமைமறைவாகிவிட்டனர். சம்பவத்தை தொடர்ந்து ஆலங்குளம் போலீசார் இது உண்மையிலேயே இவர்களின் குழந்தை தானா? இவர்கள் அளித்த பெயர் விவரங்கள் உண்மைதானா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்த நிலையில், இன்று காலை அந்த சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.