மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாடாளுமன்றம் முடங்கின. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமென எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
இதற்கிடையே, மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் 8ஆம் தேதி விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது காங்கிரஸ் எம்.பிக்கள் கௌரவ் கோகோய், ராகுல் காந்தி உள்ளிட்டோர் கார சார விவாதத்தை முன்வைத்தனர்.
இந்நிலையில், நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால், தீர்மானம் தோல்வியடைந்தது. தற்போது, மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததை அடுத்து, மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.