நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு புதிய கருப்பு நிற வேன் தயாராகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு கூட இல்லாததால், தேர்தல் களம் தற்போதே அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. மத்தியில் ஆளும் பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள முடிவு செய்து அதற்கான செயல் திட்டத்தை வகுப்பதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
தமிழ்நாட்டிலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்தாலும் பாஜக இம்முறை கணிசமான தொகுதிகளை எதிர்பார்ப்பதால், அதிமுக இதற்கு தலை அசைக்குமா அல்லது கூட்டணியில் கடைசி நேரத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுமா? என்பது குறித்த பேச்சுக்கள் இப்போதே ஆரம்பிக்க தொடங்கி விட்டன. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் பொதுத்தேர்தல் என்பதால் தனது தலைமையை நிரூபிக்கும் கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.
ஆகஸ்ட் மாதம் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. அதன்பிறகு தேர்தல் வேலைகளில் இன்னும் தீவிரமாக இயங்க அதிமுக வியூகம் வகுத்து வருகிறது. இதற்கிடையே, சேலம் மாவட்டத்தில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய பிரச்சார வேனில் வருகை தந்தது கவனம் ஈர்த்தது. வழக்கமாக இன்னோவா காரில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி, கருப்பு நிற வேனில் வருகை தந்தார்.
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இந்த வேனில் சென்ற படியே எடப்பாடி பழனிசாமி செய்ய உள்ளதாக தெரிகிறது. இந்தியாவின் போர்ஸ் நிறுவனத்தின் அர்பேனியா வகை வாகனத்தை தற்போது எடப்பாடி பழனிசாமி பயன்படுத்த தொடங்கியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், அதற்கு வசதியாக இந்த புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கு தயாராகும் வகையில் புதிய வாகனத்தை வாங்கியுள்ளதாக அதிமுகவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் முதல் முறையாக இந்த வகை வாகனங்களில் ஓட்டுனர் மற்றும் ஓட்டுனருக்கு அருகில் உள்ள இருக்கையில் அமர்பவருக்கும் ஏர்பேக் வசதியை கொண்டுள்ளது. மேலும், இருக்கையில் அமர் பவர்களுக்கு பிரத்யேகமாக ஏசி வெண்டிலென்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, புதிய பிரச்சார வேனில் சேலம் மாவட்டம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, மின் கட்டணம் மூலம் மக்கள் மீது பெரும் சுமையை திமுக அரசு சுமத்தி வருகிறது.
இந்தியாவில் எங்கும் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தான் இலாகா இல்லாத அமைச்சர் இருக்கிறார். செந்தில் பாலாஜி வாய்ந்திறந்தால் ஸ்டாலின் ஆட்சியே போயிவிடும். ஏற்கனவே, ஸ்டாலின் திமுக பொதுக்கூட்டத்தில் பேசும் போது காலையில் கண் விழித்து பார்க்கும் போது கட்சிக்காரர்களால் என்ன நடக்குமோ என பதறிப்போய் இருப்பதாக கூறினார். அன்றைக்கு சொன்னார்… இன்று பதறிப்போய் இருக்கிறார். செந்தில் பாலாஜியை நீக்க வேண்டியதுதானே.. ஏன் ஆதரவு கொடுக்கிறீர்கள்” என்று கடுமையாக சாடினார்.