காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஆளும் மத்திய அமைச்சரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவு பெறுகிறது. இதனால் மக்களவை தேர்தல் பணிகளை அரசியல் கட்சியினர் மட்டுமின்றி நிர்வாக காரணங்களுக்காக தேர்தல் ஆணையமும் ஆரம்பித்து தேர்தல் வேலைகளை முடிக்கிவிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மக்களவை தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் போட்டியிட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால், இந்த தகவலை கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று தெரிவித்துள்ள அவர், அத்தகைய விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக சோனியா காந்தி கடந்த 1999 மக்களவை தேர்தலில் கர்நாடகாவின் பல்லாரி தொகுதியில் பாஜக மூத்த தலைவர் மறைந்த சுஷ்மா சுவராஜை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.