மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் வர்த்தகம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய துறைகளுக்கான அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர், கடந்த 2016 முதல் 2021 வரை அம்மாநில உயர்கல்வி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர். அப்போது, அரசுப் பள்ளிகளுக்கு ஆசிரியர்களை நியமிப்பதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இதனால், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அமைச்சர்கள் பார்த்தா சாட்டர்ஜி, பரேஷ் அதிகாரி உள்பட பல அமைச்சர்களின் வீடுகளிலும், பார்த்தா சாட்டர்ஜிக்கு நெருக்கமான அர்பிதா முகர்ஜியின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையில், கொல்கத்தாவில் உள்ள அர்பிதா முகர்ஜியின் வீட்டில் இருந்து மிகப் பெரிய குவியலாக பணம் கைப்பற்றப்பட்டது. வங்கி அதிகாரிகளின் துணையுடன் இயந்திரங்கள் கொண்டு எண்ணப்பட்டதில் சுமார் ரூ.20 கோடி இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, பார்த்தா சாட்டர்ஜியும், அர்பிதா முகர்ஜியும் கடந்த 23ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மம்தா பானர்ஜி, தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இதில் சமரசத்திற்கு இடம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அர்பிதா முகர்ஜியின் தாயாருக்குச் சொந்தமான வீட்டில் நேற்று நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ. 20 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, பார்த்தா சாட்டர்ஜி அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.