நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறது. இவர், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், தற்போது நிர்வாகிகள் நியமனம், மக்கள் போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தான், நடிகர் பார்த்திபன் ஒரு பதிவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “நேற்றிரவு விஜய் அவர்களுடனான உரையாடல், பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் என நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள் நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். சரி அதை பதிவு செய்ய ஒரு செல்ஃபி எடுத்துக் கொள்ளலாம் என பார்த்தால் அது கனவு..! என்று பிறகுதான் தெரிந்தது.
எதற்குத்தான் இப்படியொரு பகல் கனவு வருகிறதோ தெரியவில்லை. ஆனால், சத்தியமாக வந்தது. சமீப காலமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள்.. அது சம்மந்தமாக என் மந்தமான பதில்கள் இப்படி சில பல காரணங்களால் கூட இருக்கலாம்” என்று பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள், தவெகவில் இணைய நடிகர் பார்த்திபன் விருப்பம் தெரிவிக்கிறீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.