பிப்.12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான தேமுதிக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்றைய தினம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா, “இதுவரை கூட்டணி குறித்த முடிவு எடுக்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து களம் காணுவதே பெரும்பாலான தேமுதிக நிர்வாகிகளின் விருப்பமாக உள்ளது. முந்தைய தேர்தலில் தேமுதிக தனது பலத்தை நிரூபித்ததுபோல, இந்த தேர்தலிலும் நிரூபிக்கும்.
4 மண்டலங்களில் பொதுக்கூட்டங்களை நடத்த இருக்கிறோம். யார் அதிக தொகுதிகளைத் தருகிறார்களோ, அவர்களுடன் கூட்டணி அமைப்போம். மக்களவைத் தேர்தலுக்காக இனிமேல் தான் குழு அமைக்கவுள்ளோம். பிப்.12 ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். மக்களவைத் தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் 1 மாநிலங்களவை இடம் தரும் கட்சியுடன்தான் கூட்டணி” என்று தெரிவித்தார்.