சொத்து வரியில் இருந்து தமிழக அரசுக்கு குறிப்பிட்ட அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வரியை வைத்து அரசு மக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளையும், சாலை வசதி, குடிநீர் வசதி, கட்டமைப்பு பணிகள் போன்றவற்றை செயல்படுத்தி வருகிறது. இந்த சொத்து வரியை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும். அந்த வகையில், நடப்பு நிதியாண்டு முடிவதற்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது.

இந்நிலையில், சென்னையில் இன்னும் 5 லட்சம் பேர் சொத்து வரியை செலுத்தாமல் இருக்கிறார்கள். இதுவரை 7 லட்சம் பேர் மட்டுமே செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மார்ச் 31ஆம் தேதிக்குள் சொத்து வரியை செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அப்படி செலுத்தாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும், கட்டிடம் சீல் வைக்கப்படுவது மட்டுமில்லாமல் பொருட்களும் ஜப்தி செய்யப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.