துருக்கியில் புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று நிலநடுக்கத்தின் கோரத்தை உலகுக்கு எடுத்துரைப்பதாக உள்ளது.
துருக்கி, சிரியாவில் கடந்த திங்கட் கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தொட்டுள்ளது. துருக்கியியில் கட்டிட இடிபாடுகளில் இருந்து இறந்தவர்களின் உடல்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. உயிருடன் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், AFP செய்தி ஊடகத்தின் புகைப்படக்கலைஞர் ஒருவர் எடுத்துள்ள புகைப்படம் ஒன்று நிலநடுக்கத்தின் கோரத்தை உலகுக்கு எடுத்துரைப்பதாக உள்ளது.

கஹ்ராமன்மாராஸ் பகுதியில் பூகம்பத்தின் கோரத்தாண்டவத்தை பதிவு செய்து கொண்டிருந்த மூத்த புகைப்படக் கலைஞரான ஆடெம் அல்டான், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தனது மகளின் கையை விடாமல் பிடித்திருந்த தந்தையை புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த தந்தையின் பெயர் ஹன்சர். அவர் தன்னுடைய 15 வயது மகள் இர்மார்க்கை தூங்க வைத்துவிட்டு வீட்டுக்கு வெளியே நின்றுக் கொண்டிருந்ததாகவும், நொடிப்பொழுதில் கட்டிடங்கள் சீட்டுக்கட்டுக்களை போல சரிந்து விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
சம்பவம் நடந்த சில நிமிடங்களிலேயே மகள் உயிரிழந்துவிட்டதாகவும், அவளது கையை பிடித்துக்கொண்டே இருந்துவிட்டதாகவும் கண்ணீர் மல்க கூறியுள்ளார். கிட்டதட்ட 3 நாட்களாக உயிரிழந்த தனது மகளின் கைகளை பிடித்துக்கொண்டு தந்தை ஹன்சர் அங்கேயே இருந்திருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி மனதை கணக்கச் செய்வதாக அமைந்துள்ளது.