திருமணம் ஆகதவர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால், அறிவித்திருக்கிறார்.
நாடு முழுவதுமே பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. திருமணத்திற்கு பல மாநிலங்களிலும் பெண் கிடைக்காமல் இளைஞர்கள் தவித்து வருகின்றனர். ஹரியானாவில் நிறைய இளைஞர்கள் 40 வயதைக் கடந்த நிலையிலும் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் தேடி வருகின்றனர். பல வருடங்களாகவே மிகக் குறைந்த பாலின விகிதம் உள்ள மாநிலமாக ஹரியானா இருந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, ஹரியானாவிற்குள் காலடி எடுத்து வைத்த வேற்று மாநில மருமகள்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இங்கு கடந்த 2001ஆம் ஆண்டு ஆயிரம் ஆண்களுக்கு 756 பெண்கள் இருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு பாலின விகிதம் 879 ஆக உயர்ந்தது. தற்போதைய நிலவரப்படி, ஹரியானாவில் ஆயிரம் ஆண்களுக்கு 917 பெண்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முதியோர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருவது போல் திருமணம் ஆகாதவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்க ஹரியானா மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பேசிய அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், 45 முதல் 60 வயதுக்குட்பட்ட திருமணமாகாத நபர்களுக்கு விரைவில் ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஒரு மாதத்திற்குள் இத்திட்டம் குறித்த அறிவிப்பை நிர்வாகம் வெளியிடும் என்றும் உறுதியளித்தார்.