பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற மக்கள், விடுமுறை முடிந்து மீண்டும் சென்னை திரும்ப தொடங்கியுள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறையை அறிவித்திருந்தன. சில நிறுவனங்கள் 13ஆம் தேதி விடுமுறை அறிவித்துவிட்டன. இதனால், தென் மாவட்டங்களில் இருந்து சென்னையில் வந்து தங்கி வேலை பார்க்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக சொந்த ஊர் நோக்கி படையெடுக்க தொடங்கினர். இவர்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறை சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்ததை அடுத்து, சொந்த ஊரிலிருந்து மக்கள் சென்னை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக நேற்றிரவு (ஜன.17) முதல் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மக்கள் சென்னை திரும்புவதற்காக 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 4,334 பேருந்துகள் இயக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போது ஏற்கனவே இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 15,599 பேருந்துகளில் மக்கள் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். மேலும் பலர், கார்கள், இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர். இதற்கிடையே, கடந்த 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை மட்டும் சுமார் 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணித்துள்ளனர். தற்போது இதே எண்ணிக்கையில் மக்கள் சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் இந்த எண்ணிக்கை போதவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அரசுப் பேருந்துகளில் இடம் கிடைக்காததால் தனியார் பேருந்துகளில் மக்கள் பயணிக்க தொடங்கியுள்ளனர்.