குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பல ஐ.சி.சி ஆடவர் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை வெடி வைத்து தகர்க்கப்போவதாகவும், பிரதமரையும் கொல்ல இருப்பதாகவும் மின்னஞ்சல் மூலம் மும்பை போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் உள்ள கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயை விடுவிக்க வேண்டும் என்றும் கூடவே ரூ.500 கோடி பணமும் தர வேண்டும் என்று அந்த மின்னஞ்சலில் கோரப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல்களை செயல்படுத்த பயங்கரவாத குழு ஏற்கனவே தனிநபர்களை நிலைநிறுத்தியதாகவும் மின்னஞ்சல் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போது, அந்த மின்னச்சலில் குறிப்பிடப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆரம்ப அச்சுறுத்தல் மின்னஞ்சல் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) அனுப்பப்பட்டது மற்றும் ஐரோப்பாவிலிருந்து வந்ததாகத் தெரிகிறது. என்ஐஏ உடனடியாக மும்பை காவல்துறைக்கு நிலைமை குறித்து தகவல் கொடுத்தது.
உலகக் கோப்பை போட்டிகள் தொடர்பாக முன்னதாக மிரட்டல் விடுத்த காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன் மீது ஏற்கனவே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று வாரங்களுக்கு முன்னர் ஷாஹீத் நிஜாரின் படுகொலைக்கு பழிவாங்குவதாகவும் அவர் சபதம் செய்திருந்தார். இந்நிலையில் மும்பை போலீஸுக்கு வந்த இமெயில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோய் பஞ்சாபை சேர்ந்தவர். 30 வயதான அவர் மீது பல வழக்குகள் உள்ளது. ஹரியாணா காவலர் மகனான லாரன்ஸ், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவரது நண்பர் சத்தீந்தர் சிங் ஆகியோர் மீது 2012 வரை 7 வழக்குக்கள் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறு வழக்குகளில் சிறை சென்றவர், அங்கிருந்த கைதிகளின் நட்பால் தாதாவாக மாறினார். சிறையில் இருந்து வெளியே வந்ததும் ஆயுதக் கடத்தலில் இறங்கினார். அதன் பிறகு கொலை, சிறை வாசம் என்று அசைக்க முடியாத தீய சக்தியாக வளர்ந்தார். பஞ்சாப் மட்டுமல்லாது ராஜஸ்தானிலும் அவர் ஆதிக்கம் பரவியது. பல மாநிலங்களில் குற்றங்கள் செய்த பிஷ்னோய் கும்பலுக்கு வெளிநாடுகளிலும் தொடர்புகள் உள்ளன. தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனது சர்வதேசக் கும்பலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தபடி சிறை காவலர்கள் உதவியால் போனில் உத்தரவிடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.