உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடி, மின்னல் உள்ளிட்ட காரணங்களால் 3 நாட்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அண்மைக்காலமாகத் தொடர் மழை பெய்து வருகிறது. மழை தொடர்பான விபத்துகளில் அக்டோபர் 6 முதல் 8 வரை மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அக்.6ஆம் தேதியன்று, கான்பூர் மற்றும் பிரயாக்ராஜ் ஆகிய இரண்டு இடங்களில் தலா ஒருவர் நீரில் மூழ்கி இறந்ததாக நிவாரண ஆணையர் அலுவலகம் தகவல் வெளியிட்டுள்ளது. கனமழையால் பிரதாப்கர் மற்றும் ரேபரேலியில் தலா ஒருவர் என இருவர் உயிரிழந்துள்ளனர். சீதாபூர் மாவட்டத்தில் மழையின்போது பாம்பு கடித்து மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
அக்டோபர் 7ஆம் தேதி மட்டும் அங்கே மின்னல் தாக்கி 9 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், உயிரிழப்புகள் தவிர்த்து மின்னல் தாக்கியதில் 7 பேர் காயமடைந்தனர். இதுதவிர பிரயாக்ராஜில் ஆறு பேர் மற்றும் பண்டாவில் ஒருவரும். லலித்பூரில் 3 பேரும், பல்லியாவில் ஒருவரும் மழைநீர் வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். அமேதி மற்றும் ஷ்ரவஸ்தியில் தலா ஒருவர் நீரில் மூழ்கி இருவர் காணாமல் போயுள்ளனர். ஃபதேபூரில், ஒருவர் பாம்பு கடித்து இறந்துள்ளார்.
அக்டோபர் 8 ஆம் தேதி, மின்னல் தாக்கியதில் பண்டா பகுதியில் ஒருவர் உயிரிழந்தார். கனமழை காரணமாக லக்கிம்பூர், எட்டா மற்றும் அம்பேத்கர் நகரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம், அக்டோபர் 9 மற்றும் 10ஆம் தேதி மாநிலத்தின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று கணித்தது. அக்டோபர் 10ஆம் தேதி கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 12ஆம் தேதி வரை தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அக்டோபர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் மாநிலத்தின் சில பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அத்துடன் முதல்வர் யோகி ஆதித்யநாத், பாதிக்கப்பட்ட பகுதிகளின் மாவட்ட நீதிபதிகள் தங்கள் மாவட்டங்களுக்குச் சென்று, இழப்புகளின் அளவை மதிப்பீடு செய்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு உத்தரவிட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்கள் அல்லது கால்நடைகளை இழந்தவர்களுக்கு அரசு உடனடியாக நிதியுதவி வழங்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய நிவாரணப் பணிகளில் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.