தமிழகத்தில் அடுத்து வரும் 3 மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கலாம் என்பதால், பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டுமென பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
தமிழகத்தில், கொரோனா தொற்று பாதிப்பு தினசரி 500 என்று இருந்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தாண்டு ஜனவரி முதல் ஜூலை வரை 2,915 பேர் டெங்கு காயச்சலால் பாதிக்கப்பட்டனர். கடந்த ஆகஸ்டில் 481 பேர், செப்டம்பரில் 572 பேர் என பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. பருவகால காய்ச்சலுடன், டெங்கு காய்ச்சலும் வேகம் எடுத்துள்ளது.

வரும் நாட்களிலும் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறுகையில், ”மழைபெய்ய துவங்கி உள்ளதால், சுத்தமான தண்ணீரில் உற்பத்தியாகும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரிக்கும். அதனால், அடுத்த 3 மாதங்களுக்கு டெங்கு பாதிப்பு சற்று அதிகமாக இருக்கும். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பள்ளிக்கல்வித்துறை, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் இருந்தால், அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள், டெங்கு தடுப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து, மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் சுற்றுப்புறத்திலும் தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்கள், இடங்களை கண்டறிந்து சுத்தப்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படிக்க… சூப்பர் திட்டம்..!! ஃபாஸ்டேக் முறையும் ரத்து..!! இனி கிலோ மீட்டருக்கு தகுந்தாற்போல் கட்டணம்..!!